தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.பி. ரவளிப்பிரியா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் திருட்டு மற்றும் காணாமல் போன சுமார் ரூ.22 லட்சம் மதிப்பிலான 146 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மக்களின் செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் மற்றும் காணாமல் போனது தொடர்பாக நடப்பாண்டில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சைபர் கிரைம் போலீசில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி எஸ்.பி., ரவளிபிரியா உத்தரவுபடி செல்போன்கள் கண்டுபிடிக்கும் பணியில் தனி கவனம் செலுத்தப்பட்டது.
திருடப்பட்ட மற்றும் காணாமல் போன செல்போன்களை விரைவாக கண்டுபிடிப்பதில் போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் விரைந்து செயல்பட்டு ரூ.22 லட்சம் மதிப்புடைய 146 ஆன்ட்ராய்டு செல்போன்களை மீட்டனர். தொடர்ந்து இதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்தது.
இதன்போது எஸ்.பி. ரவளிபிரியா செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் பேசுகையில், செல்போன்களை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்தும், தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார்.
மேலும் பண இழப்பு ஏற்படும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக 155260 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும், மற்ற சைபர் குற்றங்களுக்கு புகார் அளிக்க வேண்டிய https://www.cybercrime.gov.in/ என்ற இணையதளம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது இதில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், சைபர் கிரைம் போலீசார் கலந்து கொண்டனர். செல்போன்களை பெற்றுக்கொண்டவர்கள் தஞ்சாவூர் எஸ்பி மற்றும் சைபர் கிரைம் போலீசாருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர் விரைவாக செயல்பட்டு செல்போன்களை மீட்ட சைபர் கிரைம் போலீசாரை எஸ்.பி. பாராட்டினார்.
நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/