தஞ்சை பிப்.17–

வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரி, பிப்ரவரி 17ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஈடுபட்டுள்ளது. 

அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். துணை வட்டாட்சியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனி ஊதியம் 1,300, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ 9,300 இணையான ஆரம்ப ஊதியம் ரூ 36,900 மற்றும் அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி (பவானிசாகர்) மற்றும் நில அளவை பயிற்சி வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வுக்கு இப்பயிற்சிகளிலிருந்து விலக்களிக்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனதாரர்களின் பணியினை, ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். 

பேரிடர் மேலாண்மை துணை ஆட்சியர் பணியிடம் மற்றும் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடங்களை உருவாக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை பங்கேற்று, நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் பணிகள் முடங்கியது. 

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, பாபநாசம், பூதலூர், திருவையாறு, திருவிடைமருதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. 

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மொத்தமுள்ள 45 ஊழியர்களில், 38 பேர் பணிக்கு வரவில்லை. மண்டல துணை வட்டாட்சியர், தட்டச்சர், ஓட்டுநர், நில அளவைப் பிரிவில் 4 பேர் என மொத்தம் 7 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். இதனால், பல்வேறு பணிகள் நிமித்தமாக அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 

வேலைநிறுத்தம் குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி கூறியதாவது, மாவட்டம் முழுவதும் 55 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. மொத்தமுள்ள 585 பேரில், 324 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். 36 பேர் விடுப்பில் உள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்றார். 

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.