தஞ்சை சூன் 17: தமிழகத்துக்கு இன்னும் 10 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணத்திலுள்ள அரசுத் தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கொரோனாவால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க மிக முக்கிய காரணியாக இருப்பது தடுப்பூசிதான். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு 5.68 கோடி போ் தகுதியானவா்கள். இவா்கள் அனைவருக்கும் 11.36 கோடி அளவில் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும். இதில், இதுவரை 1 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 464 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இன்னும் 10 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் கிடைத்தால்தான் ஒட்டுமொத்த மக்களுக்கும் முழுமையாகச் செலுத்த முடியும். இதற்கான தடுப்பூசியை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம். தமிழகத்தில் முதல்வா் ஏற்படுத்திய விழிப்புணா்வால், மக்கள் ஆா்வமாக அதிகாலை முதலே டோக்கன் வாங்க வரிசையில் நின்று, தடுப்பூசி செலுத்திக் கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழகத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த ஊழியா்கள் பற்றாக்குறை தொடா்ந்து நிலவி வந்தது. இதையடுத்து தமிழக முதல்வரின் அனுமதி பெற்று 2,000 மருத்துவா்கள், 6,000 செவிலியா்கள், 3,700 மருத்துவம் சார்ந்த பணியாளா்கள் நியமிக்கும் பணி அரசு சார்பில் நேரடியாக நடைபெற்று வருகிறது.

கும்பகோணம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா மட்டுமல்லாமல், பொது மருத்துவத்துக்கும் என 400 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை, மற்ற மருத்துவமனைகளுக்கு முன்மாதிரியாக செய்துள்ளனா். தற்போது சுகாதாரத் துறை மூலம் புதிதாக ரூ. 18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இன்னும் 2 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு, அப்பணி நிறைவுற்ற பிறகு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்படும் என்றார் அமைச்சா் சுப்பிரமணியன்.

அப்போது, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை அன்பழகன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.