தஞ்சாவூர், அக்.22-தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் தஞ்சைக்கு வருகை தந்தனர். குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை (எம்.எல்.ஏ.) தலைமையிலான குழுவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் ஜாவஹிருல்லா, பூண்டி கலைவாணன், வேல்முருகன், சிந்தனைச் செல்வன், மாரிமுத்து, நடராஜன், ராஜா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களுடன் தமிழக அரசின் தலைமை கொறடா கோ.வி. செழியன் வருகை தந்திருந்தார். இவர்களை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்தக் குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் குழு தலைவர் செல்வப் பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: பொது கணக்கு குழு துறை சார்பில் தஞ்சை மாவட்டத்தில் பள்ளிக் கூடங்களில் உள்ள கழிப்பறை வசதிகள், பேருந்து நிலையங்கள், சிறார் பள்ளிகள், ஒரத்தநாடு பாரதிதாசன் அரசு கலை கல்லூரி உள்ளிட்ட 14 இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வுச் செய்தோம்.

கடந்த காலங்களில் நடந்த தவறுகள், சரியான நிர்வாக தன்மை இல்லாமை, அரசு பணம் விரயம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் அடங்கிய ஒரு அறிக்கையை சி. ஏ. ஜி. தணிக்கைக் குழுவினர் பொதுக் கணக்கு துறைக்கு சமர்ப்பித்துள்ளனர். அதன்படி எந்த அடிப்படையில் எந்தெந்த தவறுகள் நடந்துள்ளது என்பதை களையப்பட வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவும், நடந்த தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பது குறித்தும் ஆய்வுக்குப் பின்னர் சட்டப்பேரவையில், நாங்கள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் அனைத்தும் தரமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளையில் தனியார் மூலம் கட்டப்படும் பள்ளிக்கூடங்கள், கழிப்பறைகள் மிகவும் தரமான கட்டிடங்களாக உள்ளன. ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தரமற்றதாக இருக்கின்றன. இதுகுறித்தும் அறிக்கையில் குறிப்பிட உள்ளோம். ஒரு சில பள்ளிக் கூடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளும்போது கழிப்பறை வசதிகள் சரியாக இல்லை என தெரிய வந்துள்ளது. இப்படி இருந்தால் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் எப்படி சுகாதாரமாக இருக்க முடியும் என்பது கேள்வியாக உள்ளது.

எனவே இவைகள் குறித்தும் அறிக்கையில் தெரிவிக்க உள்ளோம். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவ மனைகளில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான 26 லட்சத்து 17 ஆயிரம் மருந்துகள் பல்வேறு வகையான நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதை சி.ஏ.ஜி. தணிக்கை குழுவினர், பொது கணக்கு குழுவிற்கு ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர்களே, நாங்கள் காலாவதியான மருந்துகளை தான் பயன்படுத்தி வந்துள்ளோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இது மிகப்பெரிய அதிர்ச்சிக்குரிய விஷயம் ஆகும். இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்தபோது, ஒரே வளாக கட்டிடத்திற்குள் ஆதரவற்ற அனாதை குழந்தைகள் ஒருபுறமும், குற்றம் சம்பந்தப்பட்ட குழந்தைகள் மறுபுறமும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒரே கட்டிட வளாகத்திற்குள் இருப்பது தவறான செயலாகும். இதனையும் ஆய்வுக்கு எடுத்துள்ளோம். எனவே அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள அனாதை குழந்தைகள் ஒரு கட்டத்திலும் மற்ற கட்டிடத்தில் குற்றம் தொடர்பான குழந்தைகள் வசிக்கவும் , இரண்டு வளாகத்திற்குள் நடுவில் மிகப் பெரிய காம்பவுண்டு சுவர் எடுக்கவும் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா (வருவாய்) சீகாந்த் (வளர்ச்சி)மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வருவாய் கோட்ட அலுவலர் ரஞ்சித் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/