தஞ்சாவூர் ஆக 07: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மாற்றுத் திறனாளிகள் முகாம் நடந்தது. இதில் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, 2 மணி நேரத்தில் அதற்கான ஆணையை சார் ஆட்சியர் பாலச்சந்தர் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கவும், மாதாந்திர உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பம் பெறவும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் வரவேற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

இதில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு தலைவர் முத்துமாணிக்கம், வட்டாட்சியர் ஜெயலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள், 200 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதில் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுத்து சார் ஆட்சியர் பாலச்சந்தர் மாதாந்திர நிவாரண உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார். ஆணையைப் பெற்றுக் கொண்ட மாற்றுத் திறனாளிகள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை ஆகியவற்றை, எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர், மனநலம் மருத்துவர், கண் மருத்துவர்கள் பரிசோதித்து மருத்துவச் சான்று வழங்கினர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/