தஞ்சாவூர் சூலை 20: தஞ்சை கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் தஞ்சை பகுதி சிறுவர்கள் விளையாட்டு மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சிறுவர்களிடையே கராத்தே, சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்பதற்கான ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் படுமோசமாக இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் தினசரி 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கின் தொடக்க காலக்கட்டத்தில் மளிகை கடைகள், பால், மருந்துகடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. வணிக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக கடைகள் அடைக்கப்பட்டன. கொரோனா 2-வது அலையின் தீவிரத்தை குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக தொற்று குறைய தொடங்கியதில் இருந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போது துணிக்கடைகள், நகைக்கடைகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்றவை திறக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகள், நீச்சல் குளங்கள், உள்விளையாட்டு அரங்கம் போன்றவற்றை திறக்க இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாததால், மாணவ, மாணவிகளின் கவனம் விளையாட்டு மீது திரும்பி உள்ளது.

பல்வேறு விளையாட்டுகளையும், தற்காப்பு கலைகளையும் கற்பதில் பள்ளி சிறுவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக கராத்தே, சிலம்பரம், டேக்வாண்டோ, யோகா போன்ற கலைகளை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள். தற்காப்பு கலைகளை கற்பதற்காக சிறுவர்கள் காலை முதலே மைதானங்களை தேடி வருகிறார்கள். தற்காப்பு கலை பயிற்சியில் ஏராளமான சிறுவர்களை காணமுடிகிறது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் அருங்காட்சியகம் முன்பு உள்ள மைதானத்தில் காலையிலேயே கராத்தே, சிலம்பம் கலையை கற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வருகிறார்கள். இந்த மைதானத்தின் பல்வேறு இடங்களில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை தற்காப்பு கலை பயிற்சி நடக்கிறது. பயிற்சி பெறும் சிறுவர்கள் பலர் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றுடன் வருகின்றனர். இதே போல் கிரிக்கெட், இறகுப்பந்து, வாலிபால் போன்ற விளையாட்டு பயிற்சிகளிலும் சிறுவர்கள் பங்குபெற்று வருகிறார்கள்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/