தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு-திருவோணம்-கறம்பக்குடி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால், ஒரத்தநாடு கல்லூரியில் படிக்கும் இப்பகுதி மாணவிகள் சுமை ஊர்திகளில் ஏறி கல்லூரிக்கு வருவதாகக் கூறப்படுகின்றது.

ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தக் கல்லூரியில் தஞ்சை மட்டுமல்லாது, திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனா்.

இக்கல்லூரியில் படித்து வரும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மாணவிகள் நகரப் பேருந்துகள் (டவுன் பஸ்) மூலம் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா பொது முடக்க தளா்வுகளுக்கு பிறகு அண்மையில் இக்கல்லூரி திறக்கப்பட்டது. கிராமங்களில் நகரப் பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது இதனால், பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். அவா்களால் கல்வி நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

இதனால், ஒரத்தநாடு அரசு கல்லூரிக்கு வரும் கறம்பக்குடி, திருவோணம் கிராமப் பகுதி மாணவிகள் பலரும் கூட்டுச்சோ்ந்து சுமை ஊர்திகளை வாடகைக்கு அமா்த்திக் கொண்டு அதில் கல்லூரிக்கு வந்து சோ்கின்றனா். கிராமப்புற மாணவா்களின் நலன் கருதி, ஒரத்தநாடு – கறம்பக்குடி இடையே கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும் என மாணவிகள் பலமுறை சாலை மறியலில் ஈடுபட்டும், இதுவரையில் போக்குவரத்து அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகின்றது.

அரசு இதன் உண்மை நிலையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/