தஞ்சாவூர் சன 28: மாணவி தற்கொலை சம்பவத்தில் மதமாற்ற சம்பவம் ஏதும் கிடையாது. கிராமத்தில் உள்ள எங்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்கின்றனர் என்று கூறி தஞ்சை மாவட்ட ஆட்சியர் மைக்கேல்பட்டி கிராம மக்கள் விண்ணப்பம் அளித்தனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் படித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் மரணத்துக்கு ஒரு தரப்பினர் மதமாற்ற வற்புறுத்தலால் தான் தற்கொலை செய்தார் என்றும், மற்றொரு தரப்பினர் மத மாற்றம் கிடையாது. வேறு பிரச்சினையில் தான் லாவண்யா தற்கொலை செய்தார் என்றும் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மாணவி பேசுவது போல் வெளியான வீடியோவில் மதமாற்றம் குறித்து அவர் ஏதும் தெரிவிக்காதது உண்மை நிலையை எடுத்து கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் மாணவிக்கு வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி வார்டன் சகாய மேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 18-க்கும் மேற்பட்டோர் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊரில் சுமார் 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் அடங்கும். இதுநாள் வரையிலும் நாங்கள் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக தான் வாழ்ந்து வருகிறோம். மத சம்பந்தமாக எங்கள் ஊரில் எந்தப் பிரச்சனையும் நடந்தது இல்லை. மத சம்பந்த நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வோம். எங்கள் ஊரில் இயங்கும் தூய இருதய பள்ளி 163 ஆண்டு பழமை வாய்ந்தது.
இந்த பள்ளியில் 60 சதவீதத்திற்கு மேல் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர் . அதேபோல் விடுதியிலும் இந்து மாணவிகளே அதிகம் தங்கி படித்து வருகின்றனர். இதுவரை பள்ளியில் மதமாற்றம் நடந்ததே கிடையாது. தற்போது தற்கொலை செய்து கொண்ட மாணவி மரணத்தை வைத்து சில கட்சி, இயக்கத்தினர் ஆதாயம் தேடி வருகின்றனர். நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் சில கட்சிகள் பலதரப்பட்ட குழுக்கள் அமைத்து விசாரிப்பதையும் கண்டிக்கிறோம். எங்கள் ஊருக்கு யாரோ சிலர் வந்து மாணவி மதமாற்றத்தால் தான் தற்கொலை செய்தார் என்று கூறவேண்டும் என்கின்றனர். பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக உண்மைக்குப் புறம்பாக எங்களை பொய் சொல்ல கூறுகின்றனர்.
அவர்கள் யார் என்று தெரியவில்லை. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். நாங்கள் மத நல்லிணக்கத்தோடு ஒற்றுமையுடன் வாழ்வதை சிலர் சீர்குலைக்க முயல்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/