தஞ்சாவூர் நவ 10: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 40 பேர் கொண்ட மீட்பு குழுவினர் தஞ்சைக்கு இன்று வந்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.

இந்நிலையில் பேரிடர் காலத்தில் மீட்பு பணிக்காக சென்னை ஆவடியில் இருந்து 80 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இன்று தஞ்சை வந்தனர். 80 பேர் கொண்ட மீட்பு படையினர் 40 பேர் கொண்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தஞ்சையில் ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையிலும், பட்டுக்கோட்டையில் உதவி ஆய்வாளர் தலைமையிலும் தயார் நிலையில் உள்ளனர்.

மீட்பு பணிக்கு தேவையான ஜெனரேட்டர்கள், மரம் அறுக்கும் கருவிகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ரப்பர் படகுகள், தானியங்கி விளக்குகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
பொது மக்கள் மழையால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டால், மீட்பு படையினர் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/