தஞ்சாவூர் நவ 09: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வருவாய் கிராமங்களில் கணினி மயமாக்கப்பட்ட ஆன்லைன் தமிழ் நிலம் மென்பொருளில் உள்ள பதிவுகளில் உள்ள எளிய பிழைகளை திருத்தம் செய்வது தொடர்பாக வரும் 19ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்ததன்படி கிராம அளவிலான பட்டா பதிவுகளில் உரிய மாறுதல் கோரிக்கைகள் அரசாணை (நிலை) எண் 644 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் பிரிவு SS-II(2), நாள் 11.10.2021ன் படியும், நகர அளவிலான பட்டாபதிவுகளில் உரிய மாறுதல்கள் செய்ய அரசாணை (நிலை) எண் 612 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நகர நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டம் பிரிவு (SS-II(2)), 1.10.2021ன் படியும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் பட்டா கணினி மயமாக்கப்பட்ட ஆன்லைன் தமிழ் நிலம் மென்பொருளில் உள்ள பதிவுகளில் உள்ள எளிய பிழைகளை திருத்துதல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது.

இதன்படி வரும் 10ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நிலம் மென்பொருளில் உள்ள கீழ்க்கண்ட இனங்கள் தொடர்பாக மனு அளிக்கலாம்

புல எண்கள் மற்றும் உட்பிரிவு எண்கள் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இனங்கள், பரப்பு தவறாக பதிவுகள் மேற் கொள்ளப்பட்ட இனங்கள், பட்டாதாரர் பெயர், தந்தை-பாதுகாவலர் பெயர் ஆகியவற்றில் தவறாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட இனங்கள்.

உறவுமுறை தவறாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட இனங்கள், காலியாக உள்ள கலங்களில் உள்ள பதிவுகள் மேற் கொள்ளுதல் உரிமை உடைய நில உரிமையாளர்களுக்கு பதிலாக அருகில் உள்ள நில உரிமையாளர்களின் பெயரினை பட்டாவில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இனங்கள் குறித்த மனுக்களை பொதுமக்கள் தங்களது பகுதி கிராமங்களில் குறிப்பிட்ட நாளில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்து தமிழ்நிலம் மென்பொருளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/