தஞ்சாவூர் சன 08 தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1,200 திருநங்கைகள் உள்ளனர். இதில் சுமார் 50 பேருக்கு மட்டுமே ரேஷன் கார்டு உள்ளது. இதனால் மற்ற திருநங்கைகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதையடுத்து தங்களுக்கும் ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் வட்டத்துக்குட்பட்ட திருநங்கைகள் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர் மாவட்ட திருநங்கைகளின் ஒருங்கிணைப்பாளர் ராகினி தலைமையில் 30 பேர் தங்களுக்கு ரேஷன் கார்டு வழங்குமாறு அதற்கான விண்ணப்பத்தை, வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜிடம் வழங்கினர். பின்னர் திருநங்கைகளின் ஒருங்கிணைப்பாளர் ராகினி கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,200ம் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். ஆனால் குறைந்த அளவிலேயே ரேஷன் கார்டு பெற்றுள்ளனர். ரேஷன் கார்டு பெற ஆதார் அட்டை கட்டாயம் என கூறப்படுகிறது. நாங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது ஆதார் அட்டையை பெற்றோர் தர மறுக்கின்றனர்.

எனவே தமிழக அரசால் திருநங்கைகளுக்கு நலவாரியம் மூலம் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக் கொண்டு ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும் என்றார்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today