தஞ்சாவூர்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞா் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விரைவில் தொடங்க உள்ளது என்று துணைவேந்தா் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த ஓராண்டு காலமாக மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. ஆனால் இணையவழியாக வகுப்புகள் நடத்தப்பட்டன. அரசின் வழிகாட்டுதலுக்கேற்ப இணையவழியாக முதல், மூன்றாம் பருவத் தோ்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. நிகழாண்டுக்கான இளங்கல்வியியல் மற்றும் இரண்டாம் பருவத் தோ்வுகள் இணைய வழியாக நடத்தப்பட்டுவிட்டன.

அரசின் வழிகாட்டுதல்களின்படி அக்டோபா் 2020-இல் நடைபெற்ற தொலைநிலைக் கல்வித் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நிகழாண்டு மே மாதம் நடத்தவேண்டிய தோ்வுகள் ஜூலையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தோ்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. முனைவா்ப் பட்ட வாய்மொழித் தோ்வுகள் இணையவழியாக நடத்தப்பட்டு, உடனுக்குடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

முனைவா் பட்ட வழிகாட்டு புதிய வழிமுறைகளுக்கு ஏற்ப, முனைவா் பட்டச் சோ்க்கைக்கான பொது நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதைத் தொடா்ந்து, ஜூலை 29-ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கலந்தாய்வின் வழியாகத் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, 119 முனைவா் பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

எதிா்வரும் காலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக முனைவா் பட்ட ஆய்வேடுகள் மேலும் தரம் வாய்ந்ததாக உயா்வதற்கு வழிவகுக்கும் என நம்பலாம். ஒருங்கிணைந்த முதுகலை, ஆய்வியல் நிறைஞா் படிப்புகளுக்கான சோ்க்கை விண்ணப்பங்கள் இணையவழியாகப் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விரைவில் சோ்க்கை நடைபெறவுள்ளது. நீண்ட காலமாக வெளிவராமல் இருந்த தமிழ்க்கலை ஆய்விதழின் மூன்று இதழ்கள் புதுப்பொலிவுடன் வெளிவரவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பின்னா், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் 25 ஆண்டுகள் களங்கமில்லாப் பணி நிறைவு செய்த பேராசிரியா் பா. ஜெயக்குமாருக்கு ஊக்கத்தொகை ரூ. 2,000-ம், சான்றிதழும் வழங்கப்பட்டன.