தஞ்சாவூர் அக்.23-காவிரி டெல்டாவில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பேரழிவு பெரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் முற்றிலும் அழிந்தது. தமிழக அரசு – முழுமையிலும் 100% முழு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ20 ஆயிரம் இடுபொருள் இழப்பீடாக வழங்கியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு காப்பீட்டு நிறுவனம் மூலமாக பெற்று தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
அன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க, ஸ்டாலின் அவர்களும் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் இருந்து நேரடியாக காவிரி டெல்டா மாவட்டங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு,உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் தற்போது இப்ஃப்கோ டோக்கியோ காப்பீட்டு நிறுவனம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி வருகிறது. நாகை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் 195 வருவாய் கிராமங்களுக்கு ஜீரோ என குறிப்பிடப்பட்டு இழப்பீடு வழங்க மறுத்துள்ளனர். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒன்று முதல் பத்து சதவிகித வரையிலுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகள் மீள வழி இன்றி பரிதவிக்கின்றனர்.
திட்டமிட்டு மாவட்ட வேளாண் துறை அலுவலர்களும் காப்பீட்டு நிறுவனமும் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப பாதிக்கப்பட்டவர்களை பழிவாங்க மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையாக தெரியவருகிறது. இதுகுறித்து தமிழக அரசாங்கம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குறிப்பாக இச்செயலால் தமிழக அரசிற்கும் விவசாயிக்குமான உறவை சீர்குலைக்கும் முயற்சியில் நாகை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்ட வேளாண் அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பார்களோ? என எண்ணத் தோன்றுகிறது.
குறிப்பாக நாகப்பட்டினம்,மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், திருமருகல் ஒன்றிய பகுதிகளில் முற்றிலும் அழிந்ததை நேரில் அமைச்சர்கள் அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்கள். பல கிராமங்களில் அழுகி துர்நாற்றம் வீசியதை நேரடியாகவே உணர்ந்திருக்கிறோம். இந்நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு இழப்பீடு இல்லை என மறுத்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் விடுபடாமல் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி வரும் நவம்பர் 9ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை சென்னையில் முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாடு தீவிரமடைந்து இருக்கிறது. டிஏபி யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாட்டால் சம்பா சாகுபடியில் மிகப்பெரும் மகசூல் இழப்பு சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக வேளாண் துறையில் பணிபுரிந்து விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் வேளாண் அலுவலர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்திட வேண்டும்என்றார்.
கூட்டத்திற்குமயிலாடுதுறை மாவட்ட தலைவர் தலைமை ஏற்றார், மாநில தலைவர் தஞ்சை எல் பழனியப்பன். திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன்,மாவட்ட பொருளாளர் நன்னிலம் நடராஜன் துணை செயலாளர் பி முகேஷ் நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு செயலாளர் தலைஞாயிறு கமல் ராம், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விசுவநாதன் மற்றும் 50க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/