தஞ்சாவூர்: தஞ்சையில் முழு ஊரடங்கின் போது திறந்திருந்த 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகள், பால் விற்பனை கடைகள் முழுவதுமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும் மாலை 6 மணி முதல் 9 மணி வரையும் பார்சல் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதையும் மீறி கடைகள் செயல்படுகிறதா என அதிகாரிகள் போலீசார் அடங்கிய குழுவினருடன் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது தஞ்சை சீனிவாசபுரம் சேப்பன்சாவடி பகுதியில் மளிகை கடை, முட்டை கடை ஆகியவை திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. கடைகளின் முன்பு மக்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர் இதை பார்த்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று கடைகளை திறந்து வைத்திருந்த அதன் உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்து பூட்டி சீல் வைத்தனர். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதேபோல் தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் மளிகை கடை ஒன்று திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டதால் அந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் திறந்து வைக்கப்பட்டு இருந்த ஜெராக்ஸ் கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்