கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசின் தடை உத்தரவை மீறி இயங்கிய இரண்டு நகை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் ஏராளமான நகை கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில் கும்பகோணம் சாரங்கபாணி கீழ சன்னதி பகுதியில் இயங்கி வரும் பிரபல நகை கடையில் அரசு தடை உத்தரவை மீறி முன்பக்க கதவை அடைத்துக்கொண்டு பின் பக்க கதவு வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து நகை வியாபாரத்தில் ஈடுபடுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள நகை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள 2 பிரபல நகை கடைகளில் அரசு உத்தரவை மீறி நகை விற்பனை நடைபெறுவது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

தொடர்ந்து 2 நகை கடைகளுக்கும் நகராட்சி ஆய்வாளர் டேவிட் பாஸ்கர ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.