தஞ்சை மே 26: தஞ்சையில் விதிகளை மீறி செயல்பட்ட ஆவின் பாலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலஉளூர் வடக்குத் தெருவைத் சேர்ந்தவர் என். ராஜகுமாரி. இவர் தஞ்சாவூர் சாந்தபிள்ளைகேட் அருகே ஆவின் பாலகத்தை நடத்தி வந்தார்.

இந்தப் பாலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் விதிகளுக்கு முரணாக வடை, பஜ்ஜி, முறுக்கு மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், கொரோனா ஊரடங்கு விதிகளைக் கடைபிடிக்காமல், சமூக இடைவெளி பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் கூடுதலாகப் பாலகத்தை நடத்தி வந்ததாகத் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு மின்னஞ்சல் மூலம் புகார்கள் வந்தன.

இதையடுத்து ஆவின் பாலகத்தின் முகவர், ஒப்பந்த விதிகளை மீறித் தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாலகம் நடத்தி வந்ததன் காரணமாக ராஜகுமாரிக்கு வழங்கப்பட்ட ஆவின் பாலகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் அந்த கடையையும் மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது பொது மேலாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.