தஞ்சாவூர் அக் 08: தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று கூடுதல் தலைமை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையருமான பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இதில் கூடுதல் தலைமை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையருமான பணீந்திர ரெட்டி, மாவட்ட கண்காணிப்பு மற்றும் அரசு முதன்மை செயலர். சிறு தொழில் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் விஜயகுமார் பங்கேற்றனர். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

கூட்டத்தை துவக்கி வைத்து கூடுதல் தலைமை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையருமான பணீந்திர ரெட்டி பேசியதாவது;

தமிழக முதல்வர் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சிமுறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் மற்றும் பொது சுகாதாரத் துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத்துறை, நுகர்பொருள் வாணிப கழகம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை மின்சார வாரியம், மோட்டார் வாகன பராமரிப்பு துறை ஆகிய அனைத்து துறை அலுவலர்களும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்கும், நிவாரண பணிகளில் எந்த விதத்திலும் தொற்பு ஏற்படாத வகையிலும், உயிர் சேதம் ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் 195 பகுதிகள் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடத்திற்கு தேவையான நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்

தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு ரூ.5,82,960 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. கூட்டத்தில் எஸ்.பி. ரவளிபிரியா, கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், பயிற்சி துணை ஆட்சியர் கௌசிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/