தஞ்சை மே 20 (வியாழன்) சா. தருமாம்பாள் அம்மையார் அவர்களின் நினைவு நாள், சா. தருமாம்பாள் அம்மையார் யார், அவர் நமது சமூகத்திற்கு என்ன செய்தார் ஏன் நாம் அவரைக் கொண்டாட வேண்டும் என்பதை பார்ப்போம்.

சா.தருமாம்பாள் என்கிற சரஸ்வதி என்ற இயற் பெயருடைய அம்மையார் பாப்பம்மாள் மற்றும் சாமிநாதன் தம்பதியினருக்கு மகளாக 1890 ஆம் இன்றைக்கு கருந்தட்டான்குடி என்றழைக்கப்படும் கருந்திட்டைக்குடியில் பிறந்தார்.

இளம்வயதில் தனது தாய் தந்தையரை இழந்த அம்மையார் இலக்குமி அம்மையா‍ரின் அரவணைப்பில் வளர்ந்தார், நாடகத்தில் ஈடுபாடும் நாட்டமும் உடைய இவர், குடியேற்றம் முனுசாமி நாயுடு என்ற நாடக நடிகரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாள ‍மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர் சித்த மருத்துவம் பயின்று மருத்துவச் சேவை செய்தார்.

நீதிக்கட்சி துவங்கிய காலத்தில் அதில் ஒரு முதன்மையான தலைவர்களில் ஒருவராக விளங்கியர், திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகத்தில் உறுப்பினராக பணியாற்றிவர். ஆதரவற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்பினை அமைத்து தருவது, கைம்பெண்கள் திருமணம் என்று பல சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட்டவர்.

1938 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதன்மையான பங்காற்றியவர் சா. தருமாம்பாள் அம்மையார், அதேப்போல் தஞ்சையில் கருந்தட்டாங்குடியில் இருந்த அவரது வீட்டை தஞ்சையின் கரந்தை தமிழ்ச்சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

அம்மையார் அவர்களின் பெயரில் கைம்பெண்களின் மறுவாழ்விற்காக டாக்டர் சா.தருமாம்பாள் நினைவு கைம்பெண் திருமண உதவித்திட்டத்தை அரசு நடத்தி வருகின்றது.

தஞ்சை கரந்தையில் அம்மையார் அவர்களின் பெயரில் அரசு பாலிடெக்னிக் இயங்கி வருகின்றது, அதேப்போல் சென்னை மாநகராட்சி அம்மையார் அவர்களின் பெயரில் ஒரு பூங்கா ஒன்றை பராமரித்து வருகின்றது.

தஞ்சையில் பிறந்து பெண்களின் முன்னேற்றம், தமிழ் மொழி வளர்ச்சி ‍என்று பெருந்தொண்டாற்றிய அம்மையார் சா. தருமாம்பாள் அவர்களின் நினைவு நாளான மே 20 ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு கூர்ந்து போற்றுவோம்.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை.