தஞ்சை மே 21: காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் உள்ளிட்டவற்றை தூா்வார ரூ. 65.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 97.89 அடியாக உள்ளது. இந்நிலையில், நிகழாண்டு டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கலாமா? என்பது குறித்து தஞ்சாவூரில் விவசாயிகளிடம் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கடந்த 16ம் தேதி கலந்தாலோசனை நடத்தினார். அப்போது, மேட்டூா் அணையை திறப்பதற்கு முன்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சா் துரைமுருகன் அறிவித்தார்.

இதன்படி, காவிரி டெல்டாவில் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவை தூா்வாரும் பணிக்கான அரசாணையை அரசின் முதன்மைச் செயலா் மணிவாசன் வெளியிட்டுள்ளார். இதில், திருச்சி மாவட்டத்தில் அரியாறு கோட்டத்தில் 43 பணிகளும், ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் 20 பணிகளும் என மொத்தம் 63 பணிகள் மூலம் 162.81 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணி மேற்கொள்ள ரூ. 5.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்திலுள்ள திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் 10 பணிகள் மூலம் 60.60 கி.மீ. தொலைவுக்கு தூா்வார ரூ. 1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரியலூா் மாவட்டத்திலுள்ள திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டப் பகுதியில் 10 பணிகளும், மருதையாறு கோட்டத்தில் 23 பணிகளும் என மொத்தம் 33 பணிகள் மூலம் 123.65 கி.மீ. தொலைவுக்கு தூா்வார ரூ. 7.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா் காவிரி கோட்டத்தில் 62 பணிகளும், மயிலாடுதுறை கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 6 பணிகளும், வெண்ணாறு கோட்டத்தில் 53 பணிகளும், கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் 44 பணிகளும், பட்டுக்கோட்டை அக்னியாறு கோட்டத்தில் 20 பணிகளும் என மொத்தம் 185 பணிகள் மூலம் 1,169.14 கி.மீ. தொலைவுக்கு தூா் வார ரூ. 20.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் காவிரி கோட்டத்தில் 48 பணிகளும், வெண்ணாறு தஞ்சாவூா் கோட்டத்தில் 50 பணிகளும், வெண்ணாறு திருவாரூா் கோட்டத்தில் 75 பணிகளும், பட்டுக்கோட்டை அக்னியாறு கோட்டத்தில் ஒரு பணியும் என மொத்தம் 174 பணிகள் மூலம் 1,282.35 கி.மீ. தொலைவுக்கு தூா் வார ரூ. 16.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் தஞ்சாவூா் காவிரி கோட்டத்தில் 49 பணிகளும், திருவாரூா் வெண்ணாறு கோட்டத்தில் 40 பணிகளும் என மொத்தம் 89 பணிகள் மூலம் 574 கி.மீ. தொலைவுக்கு தூா் வார ரூ. 5.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி தஞ்சாவூா் கோட்டத்தில் 3 பணிகளும், காவிரி மயிலாடுதுறை கோட்டத்தில் 23 பணிகளும் மொத்தம் 26 பணிகள் மூலம் 460.85 கி.மீ. தொலைவுக்கு தூா் வார ரூ. 5.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தஞ்சாவூா் கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் 3 பணிகளும், பட்டுக்கோட்டை அக்னியாறு கோட்டத்தில் 6 பணிகளும் என மொத்தம் 9 பணிகள் மூலம் 25.54 கி.மீ. தொலைவுக்கு தூா் வார ரூ. 83.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம் கொள்ளிடம் கோட்டத்தில் 58 பணிகள் மூலம் 202 கி.மீ. தொலைவுக்கு தூா்வார ரூ. 2.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 பணிகள் மூலம் 4,061.44 கி.மீ. தொலைவுக்கு தூா் வார ரூ. 65.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்