தஞ்சை, அக்.21: தஞ்சாவூர் மாவட்டத்தில் 58 குழந்தைகளுக்கு ரூ 1.80 கோடி மதிப்பில் நிவாரண நிதியுதவி தொகைக்கான காசோலைகளை தஞ்சாவூர் எம்.பி., பழனிமாணிக்கம், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்ஏ., துரைசந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

தஞ்சாவூர் ஆட்சியர் கூட்டரங்கில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த 58 குழந்தைகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் நிவாரண நிதியுதவி தொகைக்கான காசோலைகளை சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தஞ்சாவூர் எம்.பி., பழனிமாணிக்கம் வழங்கினார். ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் எம்எல்ஏ திருவையாறு துரைசந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் எம்.பி., பழனிமாணிக்கம் பேசுகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரண நிதி உதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 18 வயதிற்குட்பட்ட 125 குழந்தைகளும், பெற்றோர் இருவரையும் இழந்த 10 குழந்தைகளும், பெற்றோரில் ஒருவரை இழந்த 115 குழந்தைகளும் உள்ளன.

அதனடிப்படையில் முதற்கட்டமாக தற்போது கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் காசோலைகளும், பெற்றோரில் ஒருவரை இழந்த 55 குழந்தைகளுக்கு தலாரூ.3 லட்சம் வீதம் ரூ.1.65 கோடிமதிப்பிலான காசோலைகளும் எனமொத்தம் ரூ.1.80 கோடி மதிப்பில் நிவாரண நிதியுதவி தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில்,
இன்று 58 குழந்தைகளுக்கு நிவாரண நிதிஉதவி தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. தங்கள் குடும்பத்தில் நடந்த துயரத்தினால் பல கஷ்டங்கள் இருக்க கூடும், இருந்த போதிலும் இத்தொகையை குடும்ப செலவிற்காக பயன்படுத்தாமல் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில் செலவினங்களை அமைக்க வேண்டும்.

ஒரு சில மாவட்டங்களில் பெற்றோர்கள் இப்போதே பணத்தை எடுத்து செலவு செய்த தகவல் எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதுபோன்று தஞ்சை மாவட்டத்தில் நடக்கக்கூடாது. குழந்தைகள் அனைவரும் அரசின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் நலக்குழுவால் பாதுகாவலர்களை கண்டறிந்து குழந்தைகளை ஒப்படைத்துள்ளோம். குழந்தைகள் 18 வயது முடியும் வரை குழந்தைகள் நலக்குழு மற்றும் துறை அலுவலர்கள் தொடர்ந்து குழந்தைகளை கண்காணித்து வருவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாகமாவட்டமாற்றுத்திறனாளிகள் நலத்துறைசார்பில் 4 மாற்றுத் திறனாளிகளுக்குஆவின் பால் விற்பனைநிலையம் வைப்பதற்காக ஆணைகளை எம்.பி., பழநிமாணிக்கம், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருவையாறு எம்எல்ஏ துரைசந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

குழந்தைகள் நலக்குழுத்தலைவர் உஷா நந்தினி, மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன், மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் அசோக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/