தஞ்சை மே 28: தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டும் வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. முக்கியமாக பூதலூர் பகுதி கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வசதி செய்து தர வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை புரிந்தார். அப்போது பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ.ராஜ்குமார் அமைச்சரை சந்தித்து பூதலூர் அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அவருடன் மக்கள் உரிமை கூட்டமைப்பு நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி மற்றும் சதாசிவம் மற்றும் பலர் சென்றனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பூதலூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆன நிலையிலும் இதுவரை வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படவே இல்லை. இங்கு தலைமை மருத்துவர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். இரவு நேர மருத்துவர்கள் வேண்டும். போதுமான கட்டிடங்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும்.
பகல் மற்றும் இரவுநேர காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். பிணவறை மற்றும் பிரேத பரிசோதனைக்கூடம் அமைக்கப்பட வேண்டும். 24 மணிநேரமும் செயல்படும் எக்ஸ்ரே, ஸ்கேன், சி.டி.ஸ்கேன், இரத்த பரிசோதனை செய்யும் வசதி செய்து தர வேண்டும். மேலும் இதற்கு தேவையான மருத்துவ பணியாளர்கள், உபகரணங்கள் வசதியும் செய்து தர வேண்டும்.
நோயாளிகள் பயன்பெறும் வகையில் சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதி, பார்வையாளர்கள் தங்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். 24 மணிநேர ஆம்புலன்ஸ் வசதியையும் செய்து தர வேண்டும். மேலும் மருத்துவமனை வளாகத்தில் தரமான தார்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். சுற்றுச்சுவர்களும் அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்