தஞ்சை சூன் 25 தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வியாழக்கிழமை அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களுடன்  கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில் மாவட்ட ஆட்சியரியடம்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, 

நடப்பு கே.எம்.எஸ் 2021-22 பருவத்திற்கான நெல்கொள்முதல் ஆலோசனைகளை முன்வைக்கிறோம். தேவையான அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திடவும், அங்கு காவலர், உதவியாளர், கொள்முதல் எழுத்தர்களை உடனடியாக நியமிக்கவும், அவர்கள் பணியில் சேர்வதை உறுதி செய்யவும் வேண்டும். 

அவ்வப்போது மழை வரும் சூழல் இருப்பதால், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை பாதுகாக்க, தேவையான தார்ப்பாய் இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும். கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் இயக்கம் செய்திட வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யவேண்டும். 

நெல்லில் ஈரப்பதம் 20 சதம் வரை கொள்முதல் செய்திட சிறப்பு அனுமதி பெற்றிட வேண்டும். கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகையினை விவசாயிகள் கணக்கில் உடனடியாக வரவு வைக்கவும், விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூபாய் 40 வரை நடக்கும் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும் வேண்டும். 

அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது போல நடமாடும் கொள்முதல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் தேவையான நெல் கிடங்குகள் மற்றும் உலர் கலங்கள் அமைத்திட வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் அளித்தகோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

தற்போது கோடை நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேவையான பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டாலும் ,இன்னும் பல இடங்களில் திறக்கப்பட வேண்டியுள்ளது. எனவே அறுவடை நடைபெற்று வரும் அனைத்து கிராமங்களிலும் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும். அதில் நெல் உள்ள இடங்களில் கூடுதலான மையங்கள் திறக்கப்படுவது  விவசாயிகளுக்கு உதவி புரிவதாக இருக்கும். 

தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை பாதுகாப்பதற்கு, தேவையான தார்பாய் வழங்கப்படாத நிலை உள்ளது. இதனால் மழை போன்ற காரணங்களால் நெல் நாசமாகும் நிலைமை உள்ளது. எனவே நெல்லை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். 

கொள்முதல் செய்யப்பட்ட நெல் கிடங்குக்கு கொண்டு செல்லப்படாமல் தேங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வதில் கூடுதல் காலதாமதமாகிறது. இதனால் நெல்லை தரத்தோடு பாதுகாப்பதும், பல நாட்கள் காத்திருப்பதும் என்ற நிலை உள்ளது. எனவே துரிதமாக நெல்லை இயக்கம் செய்ய வேண்டும். 

மேலும் கொள்முதலுக்கு தேவையான சாக்கு, சணல் பற்றாக்குறை எல்லா மையங்களிலும் உள்ளது. எனவே தேவையான உபகரணங்களை தாமதமின்றி வழங்க வேண்டும். கொரோனா உள்ளிட்ட பல்வேறு இயற்கை இடர்பாடுகளை தாண்டி கடுமையான சிரமங்களோடு, உற்பத்தி செய்யப்பட்ட நெல்லுக்கு, கொள்முதல் மையங்களில் சட்டவிரோதமாக ரூ 40 கேட்டுப் பெறுவது தொடர்கிறது. 

பணியாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்டவைகள் போதவில்லை என்றால், அதற்குரிய செலவை விவசாயிகள் மீது திணித்து, தாக்குதல் நடத்தாமல், அரசே ஏற்று விவசாயிகளை சிரமத்திலிருந்து காத்திட வேண்டும். பூதலூரில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். பூதலூர் தாலுக்கா பழமாநேரிக்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறந்து உதவிட வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.