தஞ்சை ஜுன் 01: உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத. உதயகுமார் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.
தமிழக அரசு அறிவிப்பு எண்: 5/2017 ன்படி 2014 முதல் 2016 வரையிலான 663 உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட 26.07.2017 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்போது தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் ஆயிரத்து ஐநூறுக்கும் மேல் எனினும், வெறும் 663 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற ஆயிரத்து 200 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களில் 552 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது தற்போது ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட சுமார் 600 பேருக்கு கூடுதல் பணியிடம் வழங்க கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 80 முறைக்கும் மேல் 500க்கும் மேற்பட்டோர் குழுவாக சென்று அப்போதைய ஆட்சியாளர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். ஆனால், பள்ளிகளில் தொழிற்கல்வி அமுல்படுத்தப்படுவதால் உடற்பயிற்சி தொடர்பான வகுப்புகள் அவசியம் இல்லை என்று கூறப்பட்டது.
தகுதியான எங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததாலும், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 14 மாதங்களாக எவ்வித வருமானமின்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். எங்களில் பலர் இன்று கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
எனவே தகுதியான எங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினால் எங்கள் வாழ்வாதாரம் காப்பற்றப்படும். இதன் மூலம் 600 க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் பயன்பெறுவர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இக்கோரிக்கை குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்