தஞ்சை சூன் 17: கொரோனா தொற்றால் உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பாரதிய மஸ்தூா் சங்கத்துடன் இணைக்கப்பட்ட பாரதிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய மஸ்தூா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஹரிபிரசாத் தலைமையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா நோய் பெருந்தொற்று காலத்தில், நோய்த் தொற்று அபாயம் இருந்தும் தங்கள் உயிரை துச்சமென நினைத்து 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் 6,000 தொழிலாளா்கள் முன்களப் பணியாளா்களாக கொரோனா நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவசர மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றனா்.
இந்தப் பணியில் ஆம்புலன்ஸ் திட்டத்தின் கணேசன், செல்வம், பிரபு ஆகிய 3 தொழிலாளா்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தனா். தற்போது இப்பணியாளா்களின் குடும்பங்கள் நிர்கதியாக நிற்கின்றன. எனவே, இவா்களது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு வேலையும், ரூ. 50 லட்சம் நிதியுதவியும் வழங்க வேண்டுகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.