தஞ்சை ஏப்ரல் 24 தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டப்படுவதால் பாதித்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு கொள்ளிடம் ஆற்றின் வழியே மழைநீா் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கும் விதமாக, அந்த நீரை தேக்கி வைத்து, நிலத்தடி நீா்மட்டத்தை செறிவூட்டி, சென்னை, வேலூா், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா் உள்பட பல மாவட்டங்களின் குடிநீா் தேவையைத் தட்டுப்பாடின்றி நிறைவு செய்ய கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

அதன்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, அணைக்கரைக்குக் கிழக்கே கொள்ளிடம் ஆற்றில் கடலூா் மாவட்டம் ஆதனூருக்கும், நாகை மாவட்டம் குமாரமங்கலத்துக்கும் இடையே ரூ. 400 கோடி மதிப்பில் புதிய கதவணை கட்டப்பட்டு வருகிறது.

இந்த அணைக் கட்டுவதால், கொள்ளிடம் ஆற்றின் படுகையில் உள்ள பட்டா நிலங்களைக் கொண்டுள்ள 204 ஏக்கா் பாதிக்கப்படுவதால், அந்த நிலங்களின் 342 விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கோரினா். இதன்படி, தமிழக அரசும் ரூ. 31.34 கோடி நிதியை இழப்பீடாக அறிவித்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் தஞ்சாவூா் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் சென்னை உயா் நீதிமன்றத்தில், கதவணை கட்டுவதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடை, உடனடியாக வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தாா்.

வழக்கை விசாரித்த உயா் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடான ரூ. 31.34 கோடியை 12 வாரங்களுக்குள் வழங்குமாறு தமிழக அரசின் தொடா்புடைய தலைமைச் செயலா், தஞ்சை, நாகை மாவட்ட ஆட்சியா்கள், பொதுப் பணித் துறை செயலருக்கு கடந்த மாா்ச் 31ம் தேதி உத்தரவிட்டனா்.

இதையடுத்து இழப்பீட்டுத் தொகையை அவரவா் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க வேண்டும் என விவசாயிகள் சாா்பில் மனுதாரா் சுந்தர விமல்நாதன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.