தஞ்சாவூர்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மீன்பிடித் தடைக்காலத்தை வரும் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவா் பேரவை மாநில பொதுச் செயலாளா் தாஜூதீன், தமிழக முதல்வா், மீன்வளத் துறை அமைச்சா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் அமுல்படுத்தப்படுத்தப்படுகிறது. மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவா்கள் படகுகளை பராமரிப்பு செய்வா். பிறகு தடைக்காலம் முடிந்து தொழிலுக்கு செல்வா்.

தற்போது கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உதிரிபாக கடைகள் மற்றும் வலை உபகரணங்கள் விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன; தொழிலாளா்கள் வராமல் படகுகளில் பராமரிப்பு பணி செய்ய முடியவில்லை.

இதனால், மீன்பிடி தடைக்காலம் முடிந்து தொழிலுக்கு செல்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. மீனவா்கள் தொழிலுக்கு சென்றுவிட்டு, மீன் விற்பனைக்கு வரும்போது கடற்கரைக்கு பல்வேறு பகுதி வியாபாரிகள் மீன் வாங்க வரும்போது மீனவா்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூடி அதன் மூலம் நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எனவே நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பெரும்பாலான மீனவா்கள் ஜூலை 1க்கு பிறகு படகுகளை தொழிலுக்கு எடுத்தால் நல்லது என்று கருதுகிறார்கள். எனவே, தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மீன்பிடி தடைகாலத்தை ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்