தஞ்சாவூர் ஆக.24, நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தேர்தல்கால வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அறிவிக்க வேண்டும். போக்குவரத்து ஏஐடியூசி அரசுக்கு கோரிக்கை.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு தஞ்சை மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் சங்கத் துணைத்தலைவர் எம்.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார் மாநில முடிவுகள் குறித்தும், போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன் கழக நிலைகள் குறித்தும் பேசினார்கள் . கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பி.முத்துக்குமரன், சங்க பொதுச் செயலாளர் டி.கஸ்தூரி,ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை , கௌரவ தலைவர் கே.சுந்தர பாண்டியன், பொருளாளர் எஸ். தாமரைச்செல்வன் நிர்வாகிகள் அ.பீர்தம்பி, டி.சந்திரன், டி.தங்கராசு சி.ராஜமன்னார், ஆர்.ரங்கதுரை, என்.ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த 01.09. 2019 இல் பேசி முடித்து சம்பள உயர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் .கடந்த ஆட்சியில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பேச்சுவார்த்தை துவக்கப்பட்டு முடிவு பெறாத நிலையில் ரூபாய் 1000 ம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டது .

15வது ஊதிய ஒப்பந்தம் நெருங்கிவிட்ட நிலையில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்களின் பொருளாதார நிலையை உணர்ந்து நிலுவையில் உள்ள 14 வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடித்து சம்பள உயர்வு ஏற்படுத்த வேண்டும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும்.

நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவது, ஏற்கனவே நிலுவையில் உள்ள பேட்டா கோரிக்கையுடன், தற்போது பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்கின்ற அறிவிப்பில் கூடுதலாக பேட்டா உயர்த்தி வழங்கவும், ஒரு நாள் பணி செய்யும் பணி நேரத்தை வரையறுக்கவும்.

தொலை தூர பயணத்திற்கு பறிக்கப்பட்ட அட்டனன்ஸ் வழங்குவது,கடந்த 2011 முதல் வழங்க வேண்டிய இ.எல்.விடுப்பு சரண்டர் தொகை வழங்குவது, தரமான உணவு வழங்க கழக நிர்வாகமே உணவகத்தை ஏற்று நடத்துவது, தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளை தரமானதாக வழங்கிடுவது, காலணி மற்றும் பாய் வழங்கப்படுவதை தவிர்த்து அதற்குரிய தொகையை பணமாக வழங்கிடுவது,

தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் வழங்கப்படும் குடும்ப நல பாதுகாப்பு நிதி தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு அந்த ஆணையை உடன் நடைமுறைப் படுத்திடவும், தொழிலாளர் மற்றும் பணியாளர் பணியின்போது இறக்க நேரிட்டால் அந்த மாதமே குடும்ப பாதுகாப்பு நல நிதியை அந்த குடும்பங்களுக்கு உடன் வழங்கிடவும், பணி ஓய்வு பெறுகின்றவர்களுக்கு அந்த மாதமே ஓய்வுகால பணப்பலன்களை வழங்குவது.

கடந்த 20 20 மே மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்கள் வழங்குவது, கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் கும்பகோணம் கழகம் உள்ளிட்டு பல்வேறு கழகங்களில் வாரிசு பணிக்கு தேர்வு செய்து ஐந்து வருடமாக காத்திருக்கும் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை உடன் வழங்கவும், வாரிசு பணிக்கு பதிந்துள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் வாரிசு பணி வழங்கவும் கோரப்பட்டது.

ஓய்வூதியர்களுக்கு பழைய அகவிலைப்படி உயர்வு தொகையில் 119 புள்ளி மட்டுமே இணைக்கப்பட்டு இதுநாள்வரை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. பழைய அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதிய அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவதுடன், பழைய புதிய அகவிலைப்படி உயர்வுகளை ஓய்வூதியத்துடன் இணைத்து ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடவும்.

தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் பேசப்படும் பொழுது அந்த ஊதிய உயர்வு ஓய்வு பெற்றவர் களுக்கும் ஓய்வூதியத்துடன் உயர்த்தப்படுவது, ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிப்பது, அரசு ஓய்வூதியர்கள் இறந்தால் வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நலநிதி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் அமுல் படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளில் அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/