தஞ்சாவூர் நவ 16: உழவர்கள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விண்ணப்பம் கொடுத்து மடிப்பிச்சை எடுத்தார்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்ள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை அளித்தனர். அந்த வகையில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் மற்றும் நிர்வாகிகள் பாச்சூர் விஜயகுமார், நாகாச்சி கோதவிந்தராஜ், பாலாஜி மற்றும் பலர் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் ஒரு கோரிக்கையை விண்ணப்பமாக அளித்தனர்.
அந்த விண்ணப்பத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதி இன்று கடைசி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பூதலூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி என பல ஒன்றியங்களில் விவசாயிகள் நாற்று போட்டு கொண்டு வருகின்றனர். விதை போட்டு சில தினங்களே ஆகிறது. எனவே பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விண்ணப்பத்தை அளித்த பின்னர் அனைத்து விவசாயிகள் சார்பில் மடிப்பிச்சை ஏந்தி கேட்கிறேன். பயிர் காப்பீடு செய்யும் தேதியை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் முன்பாக துண்டை விரித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் பிச்சை எடுத்தார்.
நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/