தஞ்சை ஜன.29–

பூதலூர் தாலுகாவில் கதவணை அமைத்து தர வேண்டும். கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பயிர் நிவாரணம் பெற சிட்டா, அடங்கல் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றியத் தலைவர் உதயகுமார், கடம்பன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் எம்.அசோக்குமார் மற்றும் விவசாயிகள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் நேரில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, 

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா கடம்பன்குடி, இந்தலூர், சோளகம்பட்டி ஊராட்சி மக்கள், கல்லணை கால்வாய் ஆற்றில் 1500 கன அடி கொள்ளளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தால் தான், கடம்பங்குடி 316, சோளகம்பட்டி 317, பொன்விளைந்தான்பட்டி 266 வாய்க்கால்களில் தண்ணீர் செல்லும். இதற்கு குறைவாக வந்தால் தண்ணீர் வாய்க்காலில் ஏறாது. 

இங்குள்ள பகுதியில் கதவணை அமைத்து தந்தால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். பாசனத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இப்பகுதியில் கதவணை அமைத்து தரவேண்டும். 

மேலும், வெண்டையம்பட்டி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பெருமழை வெள்ளத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டு, இழப்பீடு நிவாரணம் பெற விவசாயிகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் சிட்டா, அடங்கல் வழங்க மறுக்கின்றனர். 

கோயில் நிர்வாகத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே, கிராம நிர்வாக அலுவலர்கள் தாமதப்படுத்துகின்றனரோ என அய்யம் எழுந்துள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, விவசாயிகளை வாட்டி வதைத்து வருகிறது. எனவே விவசாயிகளுக்கு தாமதமின்றி சிட்டா, அடங்கல் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை