தஞ்சாவூர் மார்ச்.2- போக்குவரத்து கழக சேவை மென்மேலும் சிறந்து விளங்கிட உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்! தஞ்சையில் நடைபெற்ற 50வது ஆண்டு பொன் விழாவில் தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி கோரிக்கை!! மக்களுக்கு முழுமையான போக்குவரத்து வசதியை அளிக்கவும், பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தவும் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் தனியார் பேருந்து கம்பெனிகள எஸ்எம் டி, ராமன்அண்ட் ராமன் ,எஸ் ஆர் வி எஸ், டி வி எஸ் உள்ளிட்ட தனியார் பேருந்து கம்பெனிகளை கடந்த 1.3. 1972 ல் அரசுடைமையாக்கி சோழன் ,சேரன், பாண்டியன், பல்லவன் என்று போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டது. போக்குவரத்துக் கழகங்கள் சேவையினால் கிராமப்புற- நகர்ப்புற இணைப்பு ஏற்பட்டது.

ஏழை ,எளிய அடித்தட்டு, நடுத்தர மாணவர்கள் கல்வி ,இளைஞர்கள் வேலைவாய்ப்பு, விவசாயிகளின் விவசாயத் தேவைகள், விளைவிக்கும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை நகரத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தல், மகப்பேறு உள்ளிட்ட மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அனைத்து பொது மக்களின் தேவைகளுக்கு முழுமையாக பயன்பட்டது, அரசின் நலத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றியது, சமூகநீதி கொள்கைகளை அமல்படுத்தி தமிழ்நாட்டின் சமுதாய வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் போக்குவரத்துக் கழகங்கள் முழுமையாக, முக்கிய பங்காற்றியது.

இன்றைக்கும் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் படித்த மாணவர்கள் ஆட்சி பணியாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கல்வியாளர்கள், சட்ட மேதைகள் ,தொழில் நுட்ப வல்லுனர்கள், சட்டமன்ற ,பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் மக்கள் பணி செய்து வருகிறார்கள் என்பது சிறப்புக்குரியது. தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் தீர்வு காணப்படாமல் இருந்தாலும்,தங்களது கடுமையான உழைப்பின் மூலம் போக்குவரத்துக் கழகங்களின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்துள்ளனர்.

அதே நேரத்தில் அகில இந்திய அளவில் எரிபொருள்சிக்கனம், வருமானம், டயர் பயன்பாடு, அன்றாடம் ஓடும் கிலோமீட்டர் தூரம்,அதிக பயணிகளை ஏற்றி இறக்குதல்,இரவு-பகல் இயக்கம்.என பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து விருதுகள் பெற்று அரசிற்கு பெருமை சேர்த்து வந்துள்ளனர். இன்றைய தினம் போக்குவரத்துக் கழகங்கள் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் சங்க பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி தலைமையில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாத்துரை முன்னிலை வகித்தார். ஏஐடியூசி மாநில செயலாளர். சி.சந்திரகுமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் க.அன்பழகன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, நுகர்பொருள் வாணிப கழக சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், மின் வாரிய சம்மேளன துணை தலைவர் பொன். தங்கவேல், திட்டதலைவர் ஏ.முபாரக்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். போக்குவரத்து சங்க நிர்வாகிகள் கே.சுந்தர பாண்டியன், எஸ்.பாலசுப்பிர மணியன், பொறியாளர் எஸ்.முருகையன், அ.சுப்பிரமணியன், எம்.மாணிக்கம், சி.ராஜமன்னார், என்.ஆர்.செல்வராஜ், டி.தங்கராசு, பி.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முடிவில் பொருளாளர் எஸ்.தாமரைச்செல்வன் நன்றி கூறினார். போக்குவரத்து கழக 50 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கடுமையான நிதி நெருக்கடியில் போக்குவரத்து கழகங்கள் இருந்தாலும் மக்கள் பயண சேவையை விடாது,முழுமையாக இயக்கி வருகின்றது. மக்கள் பயண சேவையை மேம்படுத்தவும், கழகங்கள் பாதுகாத்திடவும் தமிழ்நாடு அரசு உரிய நிதியை உடனே வழங்க வேண்டும், ஆண்டு தோறும் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து கழகங்களுக்கு தனியாக நிதி அறிவிக்க வேண்டும், தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தம் தாமதப்படுத்தாமல் பேசி முடித்து சம்பள உயர்வு ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும்.

மற்றும் பழைய, புதிய அக விலைப்படி உயர்வுகளை ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும், நிலுவைத்தொகை வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு இரண்டு வருடத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ள ஓய்வு கால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், அரசு ஓய்வூதியர்களுக்கு அமுல்படுத்தப்படுவது போன்று மருத்துவ காப்பீடு ,குடும்ப நல நிதி உள்ளிட்ட திட்டங்கள் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்தப்பட வேண்டும், அனைத்து பகுதிகளுக்கும் புதிய பேருந்துகள் இயக்கப் படவேண்டும், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஆண்டுதோறும் வாரிசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஐம்பதாவது பொன்விழா ஆண்டு கோரிக்கையாக தமிழ்நாடு அரசுக்கு முன் வைக்கப்பட்டது.

தற்போது தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராமநாதன் மன்றம் மற்றும் அதனருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ள பிரதான இடத்தில் ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு இடம் அளித்து உதவிட தஞ்சை மாநகராட்சிக்கு கோரிக்கை விடப்பட்டது. முன்னதாக பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

அரசு பேருந்துகளில் பயணம் செய்வோம், போக்குவரத்து விதிகளை மதித்து நடப்போம் ,பேருந்துகளில் வரிசையில் நின்று ஏறுவோம் , இறங்குவோம், பயணத்தில் ஓட்டுனர்- நடத்துனர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்வோம், அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லுவோம், விபத்தில்லா இயக்கம் மேற்கொள்வோம், கழகத்திற்கும், அரசிற்கும் சேவை மூலம் நற்பெயர் தேடித் தருவோம் என்று 50 வது பொன்விழா ஆண்டில் தொழிலாளர்கள் உறுதி ஏற்றனர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/