தஞ்சாவூர் பிப்.9- “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக வீரர்களின் உருவங்களை தாங்கி பங்குபெற்ற அலங்கார ஊர்திகள் நேற்று மாலை தஞ்சாவூருக்கு வருகை தந்தது.

“விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில் செய்தி துறையின் சார்பில், குடியரசு தினவிழா அணிவகுப்பில், தமிழக வீரர்களின் உருவங்களை தாங்கி பங்குபெற்ற அலங்கார ஊர்திகள் தஞ்சை மேலவஸ்தாச்சாவடி ரவுண்டானா அருகே வருகை தந்த அலங்கார ஊர்திகளை மலர்தூவி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, கவுசிக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர், அங்கிருந்து கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளோடு புதிய பேருந்து நிலையத்துக்கு அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக சென்றது. அங்கு பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு, அலங்கார ஊர்திக்கு அருகில் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இரண்டு அலங்கார ஊர்தியில், முதல் அலங்கார ஊர்தியில் தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், கர்மவீரர் காமராஜர், சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடி காத்த திருப்பூர் குமரன், தியாகி வ.வே.சு அய்யர், காயிதே மில்லத், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதார பேராசிரியராகவும், சிறை தண்டனை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா மற்றும் தியாக சீலர் கக்கன் ஆகியோர்களின் உருவ சிலைகள் இடம் பெற்றுள்ளன.


இரண்டாவது அலங்கார ஊர்தியில் மகாகவி பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், தியாகி சுப்ரமணிய சிவா மற்றும் தியாகி சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகியோர்களின் உருவ சிலைகள் இடம் பெற்றுள்ளன.

இந்த அலங்கார ஊர்தி 13 அடி அகலமும், 43 அடி நீளமும், 19 அடி உயரமும் கொண்ட அளவில் வடிவமைக்கப்பட்டுள்து. இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் தவறாமல் பார்வையிடம் விதமாக இன்றும் (9ம் தேதி) புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) எல்.கிரிராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா ஆகியோர் செய்துள்ளனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/