தஞ்சை, சன.26- தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் எளிய முறையில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசிய கொடியேற்றினார்.
இன்று நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக குடியரசு தினவிழாவில் மாணவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 54 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். மேலும் பாபநாசம் பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களை காப்பாற்றிய மூதாட்டி சரோஜா 62 மற்றும் முதியவர் கண்ணையன் ஆகியோருக்கு வீரதீர செயல்களுக்கான சான்றிதழை வழங்கி கலெக்டர் பாராட்டினார்.
இதேபோல் அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இதில் எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிக்குமார், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்தலைவர் முத்துச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சரவணக்குமார் தேசியக் கொடியேற்றினார். இதில் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)யில் நடந்த விழாவில் கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி தேசியக் கொடியேற்றினார். வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் வேம்பரசி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தனி நடனம், வீணை இசைத்தல், தனிப்பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளை நுண்கலை மன்ற பொறுப்பாசிரியர் திராவிடமணி கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏற்பாடு செய்திருந்தார்.
வல்லம் பேரூராட்சியில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்த குடியரசு தினவிழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி தேசியக்கொடியேற்றினார். முன்னதாக மகாத்மா காந்தி உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் குடியரசு தினவிழாவில் பேரூராட்சி அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் ஊராட்சித் தலைவர் ஓ.கே.சுப்பையா தேசியக் கொடியேற்றினார். இதில் துணைத் தலைவர் ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் பவுல்தாஸ், சங்கீதா சுயம்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜன் நிருபர்.
http://thanjai.today