தஞ்சாவூர் நவ 08: தஞ்சாவூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்கு சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இதை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2021 ஐ முன்னிட்டு, தஞ்சை மாநகராட்சியில் தொடக்க நிலை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்ட தஞ்சாவூர் மாநகராட்சி 51 வார்டுகளுக்கான வரைவு வாக்கு சாவடி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் வாக்களிக்கும் வகையில் 81 ஆண் வாக்காளர்கள் வாக்கு சாவடிகளும், 81 பெண் வாக்காளர்கள் வாக்கு சாவடிகளும், 34 அனைத்து வாக்காளர்கள் வாக்கு சாவடிகளும் என மொத்தம் 196 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த வாக்கு சாவடி வரைவு பட்டியல் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து ஏதேனும் கருத்துக்கள் தெரிவிக்க விரும்புபவர்கள் எழுத்து மூலம் மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம். நிறைவு செய்யப்பட்ட வாக்கு சாவடி பட்டியல்கள் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நாளை 9ம் தேதிக்கு வெளியிடப்படும். இவ்வாறு மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுபடி மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாகச் செயற்பொறியாளர் ஜெகதீசன் (வார்டு 1 முதல் 10 வரை), இளநிலைப் பொறியாளர் பாபு (வார்டு 11 முதல் 20 வரை), இளநிலைப் பொறியாளர் ஆறுமுகம் (வார்டு 21 முதல் 30 வரை), உதவிப் பொறியாளர் ரமேஷ் (வார்டு 31 முதல் 40 வரை), திட்டம் உதவி செயற் பொறியாளர் ராஜசேகரன் (வார்டு 41 முதல் 51 வரை) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/