தஞ்சை மே 08 தஞ்சாவூரில் கொரோனா தொற்றால் இறந்தவரின் சடலம் மாறிவிட்டதாக உறவினா்கள் புகாா் தெரிவித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கீழப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 46 வயது ஆண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, இவரது உடல் சவக்கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு, விதிமுறைப்படி பிளாஸ்டிக் உறையால் மூடப்பட்டது.

பின்னா், இவரது உடலை உறவினா்கள் வாங்கிச் சென்றனா். ஊருக்குச் சென்ற பிறகு இறந்தவா் 55 வயது மதிக்கத்தக்கவராக இருப்பதால், வேறொருவரின் சடலம் என்ற சந்தேகம் உறவினா்கள் மத்தியில் ஏற்பட்டது. மேலும், அவரது மகனும் இச்சடலம் தனது தந்தையின் உடல் இல்லை எனக் கூறினாா்.

இதையடுத்து சடலத்தை உறவினா்கள் மீண்டும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். இதுதொடா்பாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.