தஞ்சை சூன் 10: தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தஞ்சை மாவட்டத்தில் 23 சார்பதிவாளர் அலுவலகங்களில் 2 நாட்களில் 254 பத்திரங்கள் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒரு சில தளர்வுகளுடன் வரும் 14-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டதால் காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், பலசரக்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.

பணியாளர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி போதிய சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தும், கைகளில் கிருமிநாசினி தெளித்தும் பணியில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள் கடந்த 7-ந் தேதி முதல் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

நாள் ஒன்றுக்கு 50 சதவீத டோக்கன் மட்டும் வழங்கி சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் முதல்நாளில் குறைந்த அளவிலேயே மக்கள் வந்திருந்து பத்திரப்பதிவு செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் 23 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.

இவற்றில் பூதலூர், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் 7-ந் தேதி ஒருவர் கூட பத்திரப்பதிவு செய்யவில்லை. பாப்பாநாடு, மதுக்கூர் ஆகிய இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் தலா ஒருவர் வீதம் 2 பேர் பத்திரப்பதிவு செய்து இருந்தனர். அதிகபட்சமாக கும்பகோணத்தில் 19 பேர் பத்திரப்பதிவு செய்து இருந்தனர்.

கடந்த 7-ந் தேதி மட்டும் மாவட்டம் முழுவதும் 125 பேர் பத்திரப்பதிவு செய்து இருந்தனர். நேற்றுமுன்தினம் 129 பேர் பத்திரப்பதிவு செய்து இருந்தனர். ஆனால் நேற்று அதிகம் பேர், பத்திரப்பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கனை பெற்று கொண்டு காத்திருந்து பத்திரப்பதிவு செய்தனர். கடந்த 2 நாட்களை விட நேற்று அதிகஅளவில் பத்திரப்பதிவு நடைபெற்றது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்