தஞ்சாவூர் டிச 17 : தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் பங்கேற்ற மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் மெய்யநாதன், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து பேசுகையில், முதலமைச்சர் உத்தரவுபடி இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கல்விதுறையில் செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கல்விதரம் குறித்தும், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதிசெய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட செயலி மூலம் தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர் தேர்வுவாரிய உறுப்பினர் உள்ளிட்ட இணை இயக்குநர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் பள்ளிகளை ஆய்வு செய்து விவரங்கள் அளித்துள்ளனர் என்றார்.
பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாநிலதிட்ட இயக்குநர் சுதன், இல்லம் தேடி கல்வி சிறப்புபணி அலுவலர் இளம்பகவத், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார், மன்னார்குடி ராஜா, புதுக்கோட்டை முத்துராஜா, ஜெயங்கொண்டம் கண்ணன், பூம்புகார் நிவேதாமுருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/