தஞ்சாவூர் டிச.29–

தஞ்சாவூர் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வர்த்தகர்கள், பொதுமக்கள் சார்பில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் திங்கள்கிழமை அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

அம்மனுவில், ‘தஞ்சாவூர் மாநகரம், பழைய பேருந்து நிலையம் அருகே, மாட்டு மேஸ்திரி சந்தில் அமைந்துள்ள சந்து முனியாண்டி டாஸ்மாக் கடை, இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. வங்கி, மருத்துவமனை, கடைகளுக்கு செல்ல பொதுமக்களும், பள்ளி, கல்லூரி செல்ல மாணவ, மாணவிகளும் இவ்வழியையே பயன்படுத்தி வருகின்றனர். 

அனைவருக்கும் இடையூறாகவும், விபத்துகளுக்கு காரணமாகவும் இருக்கும், இந்த மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் பலமுறை மனு அளித்து, கோரிக்கை விடுத்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

மேலும், கடையை மூட வலியுறுத்தி கோரிக்கை விடுக்கும் வணிகர்களை, மதுக்கடையில் பார் வைத்திருக்கும் கும்பல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. இதே நிலை நீடித்தால் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். எனவே, தாங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

மாதர்சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, மாநகரச் செயலாளர் இ.வசந்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பைந்தமிழ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகரச் செயலாளர் யூ.காதர் உசேன், மாநகரத் தலைவர் எஸ்.ஹரிபிரசாத், மாநகரக்குழு ஏ.சேக், சிபிஎம் மாநகரக்குழு உறுப்பினர்கள் சி.ராஜன், எஸ்.சாந்தா, வர்த்தகர்கள் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்..

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்