தஞ்சாவூர்: ஆக.17- மாரனேரி நில எடுப்பு நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை மீறி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததை கண்டித்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் மாரனேரி கிராமத்தில் ஏரியை ஒட்டிய பகுதிகளில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகின்றனர். சிலர் ஏரிக்குள் ஆக்கிரமிப்பு செய்ததை தொடர்ந்து குத்தகை மற்றும் பட்டா வழங்கப்பட்டு விவசாயம் செய்து வருகின்ற நிலங்களையும் சேர்த்து எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்ததை தொடர்ந்து, இரண்டு கட்டமாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த 13ஆம் தேதியன்று தஞ்சாவூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் இரா.பாண்டி அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.

அவரும் சீராய்வு மனு உத்தரவு வரும் வரை காத்திருப்பதாகவும், நடவடிக்கைகளை கை விடுவதாக உறுதி அளித்தார். ஆனால் மறுநாளே கிராமத்தில் தண்டோரா மூலம் 18ஆம் தேதி நில எடுப்பு என அறிவிப்பு செய்யப்பட்டது.

பொதுப்பணித்துறை உயர் அதிகாரியின் உறுதிமொழியையும் மீறி நில எடுப்பு நடவடிக்கையை கண்டித்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்த இருந்தது ஒத்தி வைக்கப்பட்டு, வருகிற 18-ஆம் தேதி நில எடுப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் சீராய்வு மனு மீது உத்தரவு வரும் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று பாதிக்கப் பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஒருங்கிணைப் பாளர்கள் கே.ரவிச் சந்திரன் மற்றும் டி.நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியரும் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார் இந்த சந்திப்பின் போது மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநகரச் செயலாளர் ராவணன், மக்கள் அதிகாரம் மாநகர செயலாளர் தேவா, இடதுசாரி பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண் ஷோரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/