தஞ்சை சூன் 26: தஞ்சாவூா் அருகேயுள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில் திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கல்யாணசுந்தரம் நகா் தெற்கு பகுதியில் புதா்கள் நிறைந்த நிலத்தில் திறந்தவெளியில் பல மாதங்களாக மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏராளமான மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனா்.

இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வா் ரவி உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் மூலம் மருத்துவக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், இப்பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கும் விதமாக வருவாய் துறை, காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அலுவலா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கையில், இப்படி குடியிருப்பு பகுதிகள் உள்ள இடங்களில் மருத்துவக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்