தஞ்சாவூர்: கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் முன்களத்தில் பணியாற்றிய தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொது சுகாதாரத் துறையினர் 1481 பேருக்கு ஊக்கத் தொகையாக ரூ.2 கோடியே 70 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் நேரத்தில் அரும்பணியாற்றிய மக்கள் நல்வாழ்வுத்துறையை சேர்ந்தவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்து முன்கள பணியாளர்களான மருத்துவ அலுவலர்களை பாராட்டினார்.
கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து மருத்துவப்பணியாளர்கள் களப்பணியாற்றினர். முன்கள வீரர்களாக செயல்பட்டு ஆயிரக்கணக்கானோரின் உயிரை காப்பாற்றினர். இவ்வாறு கொரோனா பேரிடர் காலத்தில் அரும்பணியாற்றிய மக்கள் நல்வாழ்வு துறையை சார்ந்த 1,05,168 பேருக்கு ஊக்கத் தொகை வழங்கும் பணியை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
களத்தில் நின்று இடையறாது உழைத்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து பொதுமக்கள் பண்டிகையை அச்சமின்றி கொண்டாடும் வகையில் பணியாற்றிய அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் பண்டிகையை மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் கொண்டாடும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இதன்வாயிலாக மக்கள் நல்வாழ்வு துறையை சார்ந்த 1,05,168 பேர் பயனடைந்தனர். இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொது சுகாதாரத் துறையினர் 1481 பேருக்கு ஊக்கத் தொகையாக ரூ.2 கோடியே 70 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், துறை செயலாளர் மற்றும் துறை இயக்குநர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் டாக்டர் மு.அகிலன் மற்றும் நிர்வாகிகள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/