தஞ்சாவூர் ஆக 02: திருவாரூர் மாவட்ட கிராமியக் கலைஞர்கள் சங்கம் சார்பில், கூத்தாநல்லூரில், ஏழ்மையான நிலையில் உள்ள நாதஸ்வர கலைஞர்களுக்கு, தவில் மற்றும் நாதஸ்வரம் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட நாதஸ்வரம், தவில் மற்றும் கிராமியக் கலைஞர்களின் நலச்சங்கம் சார்பில், வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி கோயில், மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோயில் பரம்பரை தர்மகர்த்தாவும், மாவட்ட கிராமியக் கலைஞர்கள் நலச்சங்க கௌரவத் தலைவருமான ரமேஷ்குமார் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் ரகுநாதன் முன்னிலை வகித்தார். செயற்குழுத் தலைவர் இளையராஜா வரவேற்றார். தொடர்ந்து, கூட்டத்தில், அறக்கட்டளை சார்பில், மாவட்டச் செயலாளர் ரகுநாதனுக்கு கிடைக்கப் பெற்ற இசைக் கருவிகளை, ஏழ்மையான இசைக் கலைஞர்களுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து, கூத்தாநல்லூர் அருகே வக்ராநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜனுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தவில், கூத்தாநல்லூரைச் சேர்ந்த சேகர், திருத்துறைப்பூண்டி கச்சனம் அருகேயுள்ள ஆப்பரக்குடியைச் சேர்ந்த சபரிநாதன் மற்றும் நிலத்தூர் சாத்தையன் உள்ளிட்ட 3 பேருக்கும் ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள நாதஸ்வரம் என ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள இசைக் கருவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் அரிகிருஷ்ணன், காசிநாதன், சாமிநாதன், சாத்தையன் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/