தஞ்சை சூலை.9 – தஞ்சையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கி நிர்வாகிகளிடம் பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்கிறோம். அணை கட்டியே தீருவோம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியது வன்மையாக கண்டிக்கதக்கது. இதனை பிரதமர் எப்படி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை.


மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணைக்கு வரத்தும் குறைவாக உள்ளது. இதனால் குறுவை பயிர்களை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மேலும் பயிர்கள் கருகும் அபாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடுத்தபடியாக சம்பாவுக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகளால் ஈடுபட முடியாத சூழல் உள்ளது.


காவிரி பிரச்சினை குறித்தும், தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடக்கோரியும் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சரை சந்தித்து தமிழக நீர்பாசனதுறை அமைச்சர் கடிதம் கொடுத்திருப்பதும், பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதும் கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் ஒரு மரபுதான்.

ஆனால் காவிரியில் தண்ணீரை பெற்று தர கூடிய உரிமையும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்குமான பொறுப்பு ஆணைய தலைவருக்கு மட்டும் தான் உள்ளது.
இருந்தாலும் ஆணைய தலைவருக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு முன்வராதது விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.


ஆணைய தலைவரை சந்தித்து தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை பெற்று தர முதலமைச்சர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி காமராஜர் பிறந்தநாளான வருகிற 15 ந்தேதி ராசிமணல் அணைகட்டுவோம், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்போம் என்கிற கோரிக்கையை முன்வைத்து தஞ்சாவூரில் ஆயிரகணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.


இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து கலந்து கொள்ள செய்வோம். இதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/