தஞ்சை, அக். 22- எதிர்வரும் வட கிழக்குப் பருவ மழை முன்னிட்டு மழைக்காலங்களில் பொதுமக்கள் மின் விபத்தினை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் விஜய கௌரி அறிவுறுத்தி உள்ளார்.

மின்கம்பி அறுந்து விழுந்து இருந்தால் அதன் அருகே செல்லக்கூடாது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு உடன் தகவல் தெரிவிக்க வேண்டும். மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது.

மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு மின்வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும். மின்வாரியத்தின் மின்சார கம்பிகளுக்கு அருகிலோ, கீழோ பணிபுரியும் போது போதிய இடைவெளி உள்ளதா என்பதை அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மின்கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது.

மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது. அதன் மீது விளம்பரப் பலகைகளை கட்டக்கூடாது. இடி அல்லது மின்னலின் போது தஞ்சமடைய அருகில் ஏதும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மின்தடை புகார்களுக்கு 1912 சேவையை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/