தஞ்சாவூர் ஆக 25: தஞ்சாவூரில் நேற்று பெய்த பலத்த மழையால் ரயில்வே கீழ்ப்பாலத்தில் தண்ணீா் தேங்கியது. இந்த மழைநீரில் பேருந்துகள் சிக்கிக் கொண்டன.

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் மாலை வரை 2 மணிநேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், மேரீஸ் காா்னா் அருகேயுள்ள ரயில்வே கீழ்ப்பாலத்தில் சுமாா் 3 அடிக்கும் மேலாக மழை நீா் தேங்கியது. மாநகரில் முக்கியமான சந்திப்பாக இப்பகுதி இருப்பதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இக்கீழ்ப்பாலத்தில் தண்ணீரில் சிக்கியது. இப்பேருந்தில் இருந்த 50-க்கும் அதிகமான பயணிகள் கீழே இறங்க முடியாமல் தவித்தனா். இதையடுத்து, டிராக்டா் வரவழைக்கப்பட்டு, பேருந்து கயிற்றைக் கட்டி, மேலே இழுத்து வரப்பட்டது.

அந்த பேருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கிச் சென்ற மற்றொரு தனியாா் பேருந்தும் கீழ்ப்பாலத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிக் கொண்டது. அதிகளவு புகை வந்ததால், பேருந்தை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டது.

கீழ்ப்பாலத்தில் தேங்கிய தண்ணீா் வெளியேற்றப்பட்டதைத் தொடா்ந்து, இப்பேருந்தும் மீட்டு மேட்டுப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது. இதேபோல, இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுநா்களும் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/