நான் எஸ்.சி. என்பதால் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் அரசுப் பள்ளிகளில் தேசியக்கொடியை ஏற்ற விடாமல் தடுக்கின்றனர் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் குருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் குமுறல்:
தஞ்சாவூர், ஜன.25: நான் எஸ்.சி. என்பதால் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் அரசு பள்ளிகளில் தேசியக்கொடியை ஏற்ற விடாமல் ஒரு சிலர் என்னை தடுத்து வருகின்றனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குருங்குளம் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா சிவகுமார் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் கொண்டுவரும் விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் பெறப்பட்டு வருகின்றன.
ஒரு சில விண்ணப்பங்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு கலெக்டரை நேரடியாக சந்தித்தும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா சிவகுமார் (31). இவர் நேற்று தனது கணவர் சிவக்குமாருடன் தஞ்சை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து விண்ணப்பம் ஒன்றை கொடுத்தார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: நான் இந்து ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர். நான் கடந்த 2019 ஜனவரி மாதம் 6-ந் தேதியிலிருந்து குருங்குளம் மேற்கு ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருகிறேன். நான் பி.காம் வரை படித்த பட்டத்தாரி பெண். எனது கணவர் சிவகுமாரும் பி.ஏ.பட்டதாரி ஆவார். எனது ஊராட்சிக்குட்பட்ட அற்புதபுரம், சக்கரை ஆலை, தோழிகரிப்பட்டி, மேட்டுப்பட்டி, தங்கப்பன் உடையான்பட்டி, மின்னாத்தூர், குருங்குளம் மேற்கு ஆகியவை உள்ளடக்கியதாகும்.
இந்தநிலையில் மின்னாத்தூர் கிராமத்தில் மட்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற நாட்களில் அந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் தேசியக்கொடியை என்னை ஏற்ற விடாமல் தடுத்து வருகின்றனர். இது குறித்து நான் கேட்டால், நீ தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண். எனவே நீ தேசியக்கொடியை ஏற்ற கூடாது என்று மின்னாத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பா, சதீஷ் மற்றும் சிலர் கூறுகின்றனர். இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே இது குறித்து எங்கள் கிராமத்திற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி, வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/