தஞ்சாவூர் நவ 09: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின அறிவுரையின்படி தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 640 ஏரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வெள்ள பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ள 195 பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர் மழையால் மேட்டூர் அணை நாளை நிரம்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேட்டூர் அணை நிரம்பி கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படும் சூழ்நிலையில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு உள்ளோம்.
அவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகளில் தண்ணீர் அதிகம் இருப்பதால் மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை அதன் அருகில் கட்டி வைக்கக் கூடாது. மழைக்காலங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மரங்கள் அறுக்கும் எந்திரம், பொக்லைன் எந்திரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் 1500-க்கும் மேல் தயார் நிலையில் உள்ளது. 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக மணல் மூட்டைகள் தேவைப்பட்டார் அடுக்கி வைக்கப்படும்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இதேபோல் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறை உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/