தஞ்சாவூர் ஜன 02: தஞ்சை மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி மும்முரம் அடைந்துள்ளது.

தஞ்சாவூர் வட்டத்தில் மொத்த அரிசி வாங்கும் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 807 உள்ளது. இந்த ரேஷன் கார்டுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் நியாயவிலை கடைகளுக்கு அனுப்பும் பணிகளை வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜ் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிப கிடங்கில் இருந்து இந்த பொங்கல் பரிசு பொருட்கள் அடங்கிய பைகள் அனுப்பப்படுகிறது. இவற்றை ஆய்வு செய்தார். அனைத்து பொருட்களும் சரியான முறையில் எடையிட்டு கடைகளுக்கு அனுப்பபப்டுவதையும், தரமான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதையும் உறுதி செய்தார்.

தொடர்ந்து நேற்று திட்டை, ராமாபுரம், வயலூர், மாரியம்மன் கோயில், ஞானம் நகர், புளியந்தோப்பு, மேல சித்தர் காடு, கடகடப்பை, காட்டூர், கண்டிதம்பட்டு, பொட்டுவாச்சாவடி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் அனுப்பி வைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

இதுவரை தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள 155 கடைகளுக்கும் 50 சதவீத அளவுக்கு பொங்கல் பொருட்கள் தொகுப்பு பைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் 100 சதவீதமும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/