தஞ்சாவூர் சூலை 29: தஞ்சை அருகே வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் கருகும் நாற்றுக்களை காப்பாற்ற குடத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றி வருகின்றனர் உழவர்கள்.

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம்12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஆண்டு 1 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளதாக வேளாண் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்லணையின் தலைமடை பகுதியில் குடமுருட்டி ஆற்றின் பாசன வாய்க்காலான திருத்துக்கால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் 800 ஏக்கர் பாசன வசதி பெறும்.

இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் உழவர்கள் குறுவை நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். பல இடங்களில் நடவு செய்வதற்காக நாற்றுகளும் 30 நாட்களை கடந்த நிலையில் உள்ளது.

ஆனால் வாய்க்காலில் தண்ணீர் வராததால் உழவர்கள் கவலையடைந்துள்ளனர். கண்டியூர் அடுத்த திருப்பந்துருத்தி பகுதியில் சுமார் 10 ஏக்கரில் நாற்று விடப்பட்டு 35 நாட்கள் ஆகியும் வாய்க்காலில் தண்ணீர் வராததால் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

இதனால் நாற்றுகள் கருகி வருகிறது. நாற்றுகளை காப்பாற்ற வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை குடம், வாளி மூலம் இறைத்து ஊற்றி வருகிறார்கள்.

இதே போல் அந்த பகுதியில் நடவு செய்த வயல்களுக்கும் தண்ணீர் இல்லாததால் வயல்களில் வெடிப்பு விழுந்து பயிர்கள் கருகி வருகின்றன.

கருகும் பயிர்களை காப்பாற்ற வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உழவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/