தஞ்சாவூா் ஆக 24: தஞ்சாவூா் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் விவசாயிகள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது.

விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை பண்ணை ஒப்பந்தங்கள் மற்றும் சேவைகள் (ஊக்கப்படுத்துதல் – எளிமையாக்குதல்) சட்டத்தைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று முதல் வரும் 27ம் தேதி வரை நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் தோறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுகிறது.

இதன்படி, பூதலூா் ஒன்றியத்தில் ஆச்சாம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் லதா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், மூன்று வேளான் சட்டங்களையும் ரத்து செய்ய கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல நந்தவனப்பட்டியில் செந்தில்குமாா் தலைமையிலும், சானூரப்பட்டியில் சத்தியராஜ் தலைமையிலும் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

இதேபோல் கும்பகோணத்தில் உள்ள பழைய அரண்மனை தெரு, பிா்மன் கோயில் தெரு, தாராசுரம் பேரூராட்சி, மணப்படையூா், பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் பேரூராட்சி, திருவிடைமருதூா் ஒன்றியத்தில் உள்ள கிருஷ்ணாபுரம், வானாபுரம், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் குறிச்சி, சூரியமூலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலா் பாரதி, ஏஐடியுசி மாவட்டச் செயலா் தில்லைவனம், மாவட்ட நிா்வாகிகள் மதியழகன், குமரப்பா, ராதாகிருஷ்ணன், இராமலிங்கம், வசந்திவாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/