தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கோடை வெயில் தகித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பத்திலிருந்து தப்பிய மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அதிராம்பட்டினத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் வேளையில் தகிக்கும் வெயிலை கண்டு பொதுமக்கள் அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை உள்ளது. பகலில் வெப்பக்காற்று வீசுவதால், வாகன ஓட்டுனர், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்கனை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் நுங்கு, தர்பூசணி, வெள்ளரி கரும்புச்சாறு போன்றவற்றை வாங்கி சாப்பிடுகிறார்கள். இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

வெயிலுக்கு அருமருந்தாக திகழும் நுங்கை ஏராளமான மக்கள் வாங்கி செல்கிறார்கள். அதிராம்பட்டினம் பகுதியில் பெரிய மார்க்கெட், மாளியக்காடு, சேண்டாக்கோட்டை பள்ளிகொண்டான் பகுதி சாலை ஓரங்களில் வியாபாரிகள் நுங்கு குலைகளை விற்பனைக்காக குவித்து வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

4 நுங்கு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை ஆர்வத்துடன் வாங்கி அங்கேயே பொதுமக்கள் சாப்பிடுகின்றனர். உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்